நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 64 வயது முதியவருக்கு ஒடிசாவின் விம்சார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது
உலகில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றை தங்கள் வாழ்க்கை லட்சியமாக கொண்டிருப்பர். ஏதாவது ஒரு சூழ்நிலையின் காரணாமாக அவர்களால் அந்த கனவை எட்ட முடியாமல் போயிருக்கும். ஒரு கட்டத்தில் லட்சியத்தை ஒதுக்கி வைத்து விட்டு வேறு வேலையை பார்க்க தொடங்கிவிடுவார்கள். இன்னும் சிலரோ கனவை அடைய முடியாத விரக்தியில், தங்களை தாங்களே அழித்துக் கொள்ளக் கூட துணிவார்கள்.
ஆனால் மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருந்த இளைஞர் ஒருவர், தன் குடும்ப வறுமை காரணமாக லட்சியத்தை தொலைத்து விட்டார். பின்னர், வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி தற்போது பணியில் இருந்தும் கூட ஓய்வு பெற்று விட்டார். ஓய்வு பெற்ற பிறகுதான், தான் இளமையில் கண்ட கனவை நிறைவேற்றி இப்போது மருத்துவராகியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?
ஒடிசாவில் உள்ள பார்கர் மாவட்டத்தில் அட்டபிரா என்ற ஊரை சேர்ந்தவர் 64 வயதாகும் முதியவர் ஜெய கிஷோர் பிரதான். சிறு வயதில் இருந்தே இவருக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. தனது பள்ளி படிப்பை முடித்த இவர், மருத்துவ நுழைவு தேர்வை எழுதியுள்ளார். அப்போது அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.
தனது குடும்ப நிலையை கருத்தில் கொண்ட இவர், பி.எஸ்.சி படிப்பை முடித்தார். பின்னர் வங்கி ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார். தனது வருமானத்தை சிறிது சிறிதாக சேமித்து, குடும்பத்தை கரைசேர்த்துள்ளார் ஜெய கிஷோர். கடந்த 1989 ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைப்பெற்றுள்ளது. இவருக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். காலங்கள் உருண்டோடியதே தவிர மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசை மட்டும் ஜெய கிஷோரை விட்டு துளி அளவு கூட அகலவில்லை.
தன்னால் தான் மருத்துவராக முடியவில்லை. தனது 3 குழந்தைகளையும் எப்படியாவது டாக்டர் ஆக்கிவிட வேண்டும் என்பது ஜெய கிஷோரின் கனவாக இருந்துள்ளது. இதற்கிடையே மூத்த மகள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். இரண்டாவது மகள் தற்போது சட்டீஸ்கர் மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவ பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மகன் தற்போது 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றுள்ளார் ஜெய கிஷோர்.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஜெயகிஷோர், வீட்டில் சும்மா இருக்கவில்லை. சிறு வயது லட்சியமாக மருத்துவராகும் கனவை நிறைவேற்ற முடிவு செய்தார். தற்போது மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது. இதில், 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் நீட் தேர்வை எழுதலாம். வயது வரம்பு விதிமுறைகள் இல்லை. இதனை கருத்தில் கொண்ட ஜெயகிஷோர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் உதவியுடன் நீட் நுழைவு தேர்வுக்கு தன்னை தயார் படுத்தினார்.
நீட் தேர்வை எழுதிய ஜெயகிஷோர் முதல் அட்டெமிட்டிலேயே தேர்ச்சியும் பெற்றார். தற்போது ஜெயகிஷோருக்கு ஒடிசாவின் விம்சார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. 64 வயதில் கல்லூரிக்கு செல்லும் இந்த இளைஞர் தற்போது தனது விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் பல இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக மாறியுள்ளார்.
மருத்துவரானவுடன் ஏழை, எளியோருக்கு சேவை செய்வதே தனது லட்சியம் என்று இந்த மாண்புமிகு மாணவர் ஜெயகிஷோர் தெரிவித்துள்ளார்.