கேரளாவில் கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் அடக்கா ராஜூ என்ற திருடன். கொட்ட பாக்கு, தேங்காள்களை கூட திருடுவார் இந்த ராஜூ. இதனால், ராஜூவின் பெயருக்கு முன் கொட்ட பாக்குவுக்கு மலையாள வார்த்தையான அடக்கா என்பது சேர்ந்து கொண்டது. இந்த வழக்கில் அடக்கா ராஜூதான் 3- வது முக்கிய சாட்சி. இந்த அடக்கா ராஜூ மீது கேரளாவில் 40 சிறிய வழக்குகள் உள்ளன. அலுமினியங்களை திருடி விற்பதுதான் அடக்கா ராஜூவின் முக்கியத் தொழில். இந்த வழக்கில் அடக்காராஜூ எப்படி முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டார் என்பதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. அடக்கா ராஜூவும் சமீர் என்பவரும் நண்பர்கள். அடக்கா ராஜூ, தான் திருடும் அலுமினிய ராடுகளை சமீரிடத்தில்தான் விற்று வந்துள்ளார்.
அபயா கொலை நடந்த 1992 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் கோட்டயத்தில் அபயா தங்கியிருந்த St Pius மடத்தின் மாடியில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கியில் இருந்து அலுமினிய ராடுகளை அடக்கா ராஜூ கழற்றிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, பின்பக்க மாடி வழியாக மொட்டை மாடிக்கு இரண்டு பேர் டார்ச் லைட் வெளிச்சத்தில் வந்ததை பார்த்துள்ளார். உடனை , தன்னை மறைத்து கொண்ட அடக்கா ராஜூ , அவர்களின் நடவடிக்கையை கண்காணித்தார். அப்படி வந்தவர்களில் ஒருவர் தாமஸ். இவரின் முகம் ராஜூவின் மனதில் நன்றாக பதிந்து விட்டது. மற்றோருவர் பாதிரியார் ஜோஸ் புத்ரகையில் என்று சொல்லப்படுகிறது. பின்னர், பாதிரியார்கள் அங்கிருந்து சென்றதும் காலையில் தான் திருடிய அலுமினிய கம்பிகளை சமீரிடத்தில் கொண்டு சென்று விற்றுள்ளார் ராஜூ.
இந்த நிலையில், கான்வென்டில் உள்ள கிணற்றில் கன்னியாஸ்திரி விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது. பின்னர், தற்கொலை அல்ல கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதும் தானே நேரில் சென்று சாட்சி சொன்னவர்தான் இந்த அடக்கா ராஜூ. சாட்சி சொன்னால் உடனே ஏற்றுக் கொள்ள முடியுமா? நீ திருடியதற்கு என்ன ஆதாரம் என்கிற கேள்வி எழுந்தது. தான் கான்வென்டில் திருடிய அலுமினிய கம்பிகளை அடுத்த நாள் சமீரின் கடையில் விற்றதாக ராஜூ கூறினார். தொடர்ந்து, சமீரின் கடையில் போலீஸார் ரெய்டு நடத்தினர். அங்கிருந்து , அடக்கா ராஜூ விற்ற அலுமினிய கம்பிகளை போலீஸார் மீட்டனர். தொடர்ந்து, அடக்கா ராஜூவிடத்தில் விசாரணை நடத்தினர்.
ஆனால், இந்த வழக்கு அரசியல் செல்வாக்கு, பணபல ஆதிக்கத்துக்கிடையே நடைபெற்று வந்தது. சி.பி.ஐ. அதிகாரிகள் கூட நேர்மையாக விசாரணை நடத்த முடியாத நிலை காணப்பட்டது. அடக்கா ராஜூவை 58 நாள்கள் அடைத்து வைத்து பிறழ் சாட்சியாக மாற்ற முயன்ற சம்பவமும் நடற்தது. வேண்டிய அளவு பணம், வீடு, மனைவிக்கு வேலை, பிள்ளைகளுக்கு இலவச கல்வி என்றெல்லாம் ஆசை காட்டி பார்த்துள்ளனர். ஆனால், அடக்கா ராஜூ தன் வாக்குமூலத்தில் கடைசி வரை உறுதியாக நின்றார். நீதிமன்றத்தில் சாட்சியாகவும் ஏறி பாதிரியார் தாமஸை அடையாளம் காட்டியும் விட்டார். இதில், ஜோஸை அடையாளம் காட்ட முடியாததால், அவர் ஏற்கெனவே கேரள உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு விட்டார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சனில்குமார், தன் தீர்ப்பில் அடக்கா ராஜூவின் உறுதி குறித்து புகழாரம் சூட்டியுள்ளார். 229 பக்கமுள்ள அந்த தீர்ப்பில்,'' ராஜூ திருடுபராக இருந்தாலும் நேர்மையான மனிதர். சூழல் காரணமாக திருட்டில் ஈடுபட்டாலும் உண்மையை தவிர வேறு எதையும் அவர் பேசுவதில்லை. எத்தனையோ சலுகைகள் தருவதாக வற்புறுத்தியும் தன் வாக்குமூலத்தில் உறுதியுடன் நின்ற மனிதர் '' என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
தீர்ப்புக்கு பிறகு மீடியாக்களிடத்தில் பேசிய அடக்கா ராஜூ, '' எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். இப்போதும் குடிசையில்தான் நான் வசிக்கிறேன். அந்த இளம் பெண்ணின் இறப்புக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டுமென்பதில் நான் தீர்க்கமாக இருந்தேன் '' என்றார்.
தற்போது, திருட்டு தொழிலில் அடக்காராஜூ ஈடுபடுவதில்லை என்பது கூடுதல் தகவல். மரம் ஏறும் பணியில் ஈடுபட்டுள்ள அவர் இப்போது கேரளாவில் ரோல் மாடலாகியுள்ளார்.