தேவையற்ற மின்வெட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் மின் விநியோக கழகங்களும், மின் வாரியங்களும் நுகர்வோருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
நாட்டில் முதன்முதலாக மின் விநியோக விதிகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தேவையற்ற மின்வெட்டு உள்ளிட்டவை ஏற்பட்டால் ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன், புதிய மின் இணைப்பு, புதிய மின் மீட்டர் உள்ளிட்டவற்றை, மின் விநியோக கழகங்கள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றில் முதன் முறையாக மின் விநியோகம் ஒரு சேவைத் துறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மாநில அரசுகளின் எதேச்சகார அமைப்புகளாக செயல்பட்டு வந்த மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகங்கள் போன்றவை தாங்கள் வசூலிக்கும் பணத்திற்கு ஏற்ற சேவையை வழங்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
அது போன்று புதிய மின் இணைப்பை எளிதாக வீட்டில் இருந்தவாறே பெறவும் புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் வசதிகளை 6 மாதங்களுக்குள் ஏற்படுத்த மின்விநியோக அமைப்புகளுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.
பில்லிங் சைக்கிள் எனப்படும் கட்டண காலகட்டத்தை 60 நாட்களுக்கு மேல் நீட்டினால் நுகர்வோருக்கு மின்கட்டணத்தில் தள்ளுபடி வழங்க வேண்டும் என்பது மற்றோர் கெடுவாகும்.