பீகாரின் ராஜ்கிர் வனப்பகுதி அழகை கண்டுகளிக்கும் வகையில் 200 அடி உயரத்தில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹாங்ஜோ பகுதியில் 120 அடி உயரத்தில் கண்ணாடி பாலம் உள்ளது.அந்த பாலத்தை போல சிக்கிமின் பெல்லிங் பகுதியில் கடலிலிருந்து 7,200 அடி உயரத்தில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பீகாரின் நாளந்தா பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கில், ராஜ்கிர் வனபகுதியை பார்வையிட ரோப்வே உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
500 ஏக்கர் பரப்பளவு கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க புத் மார்க் பகுதியை இயற்கை சுற்றுலா தளமாக மாற்றும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக 200 அடி உயரத்தில் 85 அடி நீளமும், 6 அடி அகலம் கொண்ட கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 40 பேர் வரை நின்று பார்க்கும் வகையிலான பாலம் அடுத்த ஆண்டு திறக்கப்படவுள்ளது. அந்த பாலத்தை அண்மையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.