புதுச்சேரியில் 8 மாதங்களுக்கு பிறகு இளங்கலை, முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்த கல்லூரிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் முதல் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று முதல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்பு நடத்த அரசு அனுமதியளித்தது.
வாரத்துக்கு 6 நாள்களுக்கு மதியம் 1 மணி வரை மட்டும் வகுப்பு நடத்தவும், வகுப்பறையில் சுழற்சி முறையில் 50 சதவீத மாணவர்களை மட்டும் அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்லூரிகளுக்கு முகக்கவசம் அணிந்து மாணவர்கள் வருவது உறுதிபடுத்தப்பட்டதோடு, உடல் வெப்பநிலை பரிசோதிக்கவும், வகுப்பறையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஒரு டேபிளில் ஒருவர் மட்டும் அமரவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.