தொலைத்தொடர்புக்கான செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது. இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட இணைய மற்றும் செல்போன் சேவைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புவி கண்காணிப்புப் பணிக்காக இஓஎஸ் மற்றும் தகவல் தொடர்புக்காக சிஎம்எஸ் செயற்கைகோள்களை வடிவமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இப்பணிகளில் தொய்வு ஏற்பட்ட நிலையில், EOS-01 புவி கண்காணிப்பு செயற்கைகோள் கடந்த மாதம் ஏவப்பட்டது.
இந்நிலையில், பத்தாண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட ஜிசாட்-12ன் ஆயுட்காலம் முடிந்துவிட்டதை அடுத்து, அதற்கு மாற்றாக சிஎம்எஸ்-1 செயற்கைக் கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
ஆயிரத்து 410 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், இணையவழிக் கல்வி, தொலைமருத்துவம், பேரிடர் மேலாண்மை ஆகிய பணிகளுக்கு தேவையான தரவுகளை வழங்குவதில் உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சி-பேண்ட் அலைக்கற்றைகள் இணைய சேவை மற்றும் செல்போன் சேவைகளை மேம்படுத்த உதவுகிறது. இந்திய நிலப்பரப்பு மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் செல்போன் மற்றும் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்தும்.
சி.எம்.எஸ்.-1 செயற்கைக்கோளை சுமந்துகொண்டு பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட் இன்று ஏவப்படுகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டை ஏவுவதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதற்கான 25 மணி நேர கவுண்ட் டவுன் நடைபெற்று வருகிறது. திட்டமிட்டபடி இன்று பிற்பகல் 3.41 மணிக்கு விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்டப் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.