கர்நாடக சட்டமேலவையில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் மேலவைத் துணைத் தலைவரை அவரது இருக்கையில் இருந்து எம்எல்ஏக்கள் சிலர் கையை பிடித்து இழுத்துத் தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பசுவதை தடுப்பு சட்டத்துக்கு கர்நாடகா சட்டப்பேரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து சட்ட மேலவையின் ஒப்புதலை பெறும் முனைப்பில் கர்நாடகத்தை ஆளும் பாஜக அரசு உள்ளது. அந்த மசோதா இன்று சட்டமேலவையில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சட்டமேலவை தலைவராக காங்கிரஸை சேர்ந்த பிரதாபசந்திர செட்டி உள்ள நிலையில், அவர் இன்று இருக்கையில் அமரவில்லை. இதையடுத்து துணை தலைவரான மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த தர்மே கவுடா இருக்கையில் அமர்ந்தார்.
இதை கண்ட காங்கிரஸ் உறுப்பினர்கள், அவரது இருக்கைக்கு சென்று அவரை வலுக்கட்டாயமாக அப்புறபடுத்தினர். இதை பார்த்த மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் மற்றும் பாஜகவினர் காங்கிரஸ் உறுப்பினர்களை தடுக்கவே இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அத்தோடு துணைத் தலைவரை கையை பிடித்து இழுத்து இறுக்கையில் இருந்து கீழே தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தள்ளுமுள்ளுவின்போது இருதரப்பினரும் ஒருவரையொருவர் பிடித்து தள்ளியதோடு, சுற்றி நின்று கூச்சலிட்டபடி இருந்தனர். இதனால் சட்டமேலவையில் பெரும் பதற்றம் நிலவியது.