குஜராத்தில் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டிற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்துவருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில், அதானி குழும நிறுவனத்தின் உதவியுடன் 72 ஆயிரத்து 600 ஹெக்டர் பரப்பளவில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்கா அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
சோலார் தகடுகள் மற்றும் காற்றாலைகளை உள்ளடக்கிய இந்த பூங்கா, 30 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுடன் கட்டமைக்கப்பட உள்ளது. உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவாக அமையும், என கூறப்படும் இத்திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார்.
தொடர்ந்து, மாந்த்வி நகரில் நாளொன்றிற்கு 10 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும், கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்திற்கான பணிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 8 லட்சம் பேர் பயனடைவர் எனக் கூறப்படுகிறது.
இறுதியாக, சர்ஹாத் அஞ்சரில் 121 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழுமையான தானியங்கி பால் பதப்படுத்துதல் ஆலை அமைப்பதற்கும், மோடி அடிக்கல் நாட்டுகிறார். இங்கு நாள் ஒன்றிற்கு 2 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்படும் என, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.