கேரளாவில் இரு நாள்களுக்கு முன்பு நாய் ஒன்று காரில் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தான் வளர்த்து வந்த செல்லபிராணியை யூசப் என்பவர் தன் காரில் கயிற்றால் கட்டி இழுத்து சென்றது தெரிய வந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது காரில் கட்டி இழுத்து செல்லப்பட்ட நாய் பரவூர் அருகேயுள்ள யூசப்புக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்தவர்களிடத்தில் தஞ்சமடைந்துள்ளது. அவர்கள், ஜூலி என்று பெயரிட்டு அந்த நாயை வளர்க்கத் தொடங்கியுள்ளனர். பிறகு, யூசப்பும் ஜூலி மீது அன்பை காட்ட தொடங்கியுள்ளார். 6 மாதத்துக்கு முன் ஜூலி திடீரென்று காணாமல் போனது. யூசப்தான் ஜூலியை தேடி கண்டுபிடித்துள்ளார். அதற்கு பிறகு ஜூலிக்கு அந்த தெருவில் ராமச்சந்திரன் என்பவர் வளர்த்து வந்த குஞ்சன் என்ற நாயுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. குஞ்சன் அடிக்கடி ஜூலியை தேடி யூசப் வீட்டுக்கு வந்துள்ளது.
இதனால், எரிச்சலடைந்த யூசப் , ஜூலியை வேறு எங்காவது கொண்டு சென்று விட முடிவு செய்து காரில் கட்டி இழுத்து சென்றுள்ளார். அப்போது, குஞ்சன் நாய் அதை தடுக்க முயன்றது. ஜூலி காரில் கட்டி இழுத்து செல்லப்பட்ட வீடியோவில் பின்னாலேயே ஒரு நாய் குரைத்து கொண்டே செல்வதை காண முடியும். அந்த நாய்தான் குஞ்சன். யூசப் ஓட்டி சென்ற காரின் முன் பல முறை குஞ்சன் மறிக்க முயன்றது. ஆனால், வாயில்லா அந்த ஜீவனால் யூசப்பின் செயலை தடுத்து நிறுத்த முடியவில்லை. பிறகு, அகில் என்ற இளைஞர் யூசப்பை தட்டி கேட்ட போதுதான்,. ஜூலியை ரோட்டிலேயே போட்டு விட்டு யூசப் தப்பி ஓடி விட்டார். மாலை 6 மணியளவில் ஜூலி மருத்துவமனைக்கு கொண்டு எடுத்து செல்லும் வரை குஞ்சன் ஜூலியுடன்தான் இருந்தது.
தற்போது, குஞ்சன் - ஜூலி காதல் கதை கேரளாவை கலக்கி வருகிறது. கமல்ஹாசன் பாணியில் பார்த்தால், ' மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல ' என்றே சொல்ல வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட யூசப் ஜாமீனில் விடுவிக்கப்ப்பட்டார். 'ஜூலி மற்ற நாய்களுடன் பழகுவதை பிடிக்காமல் தான் இப்படி செய்து விட்டதாகவும் காரில் ஏற்றிய போது, ஜூலி ஏற மறுத்ததால் கயிறு கட்டி இழுத்து சென்றதாகவும் தான் செய்தது தவறுதான் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் '' என்றும் யூசப் கண் கலங்குகிறார். தற்போது, பரவூரை சேர்ந்த விலங்கின ஆர்வலர் பேராசிரியர் கிருஷ்ணன் வசம் ஜூலி ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் ஜூலியை வந்து ஆசையுடன் பார்த்து செல்கின்றனர். புனர் ஜென்மம் எடுத்த ஜூலிக்கு அபாக்கா என்று புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.