கர்நாடக மாநிலத்திலுள்ள ஐ போன்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள Wistron நிறுவனத்தில் சம்பளம் தராத காரணத்தினால் ஊழியர்கள் வன்முறையில் ஈடுட்டதால், 440 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோலார் மாவட்டத்திலுள்ள நரசபுரா என்ற இடத்தில் தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Wistron நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் லெனோவா, மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் லேப் டாப்களையும் இந்த நிறுவனம் தயாரிக்கிறது. இரண்டு ஷிப்ட்களாக பண நடைபெறும் இந்த நிறுவனத்தில் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பணியாளர்கள் பணி புரிந்து வந்திருக்கிறார்கள்.
கடந்த 4 மாதங்களாக இந்த நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஊழியர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். நிறுவனத்தில் கையில் கிடைத்த பொருள்களையெல்லாம் சேதப்படுத்தியதோடு., வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.
மேலும் விஸ்டர்ன் நிறுவனம், தங்கள் நிறுவனத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஐ போன் காணாமல் போயுள்ளதாகவும் சேதப்படுத்தப்பட்டதாகவும் புகார் கூறியுள்ளது. இந்த வன்முறையில் 440 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக 128 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் Wistron நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அம்மாநில தொழில்துறை அமைச்சர் ஜெகதீஷ்ஷெட்டர், கோலாரில் ஊதியப் பிரச்சனையில் சூறையாடப்பட்ட விஸ்ட்ரான் தொழிற்சாலைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.