மத்திய அரசு மேற்கொண்டுள்ள வேளாண் சீர்திருத்தங்களால் விவசாயிகளின் வருமானம் உயரும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியத் தொழில் வணிகக் கூட்டமைப்பு பிக்கியின் 93ஆவது ஆண்டுக்கூட்டத்தில் காணொலியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, புதிய வேளாண் சட்டங்களால் வேளாண்மை மற்றும் வேளாண் துணைத் தொழில்கள் இடையே உள்ள தடைகள் விலகும் எனத் தெரிவித்தார்.
தடைகள் அகற்றப்படுவதால் புதிய சந்தைகள் உருவாகும் என்றும், உயர்தொழில்நுட்பங்கள், முதலீடுகள் ஆகியவற்றால் விவசாயிகள் பயனடைவர் என்றும் குறிப்பிட்டார்.
வேளாண் விற்பனைக் குழு மண்டிகளில் மட்டுமல்லாமல் வெளி நிறுவனங்களிடமும் விளைபொருட்களை விற்க முடியும் என்பதால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என மோடி தெரிவித்தார்.
ஒரு துறையில் ஏற்படும் வளர்ச்சியின் தாக்கத்தைப் பிற துறைகளிலும் காணலாம் என அவர் தெரிவித்தார். நாட்டின் சிறுநகரங்களிலும் சிற்றூர்களிலும் முதலீடு செய்யும்படி தொழில்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தார். வேளாண்துறையில் தனியார் துறையில் முதலீடு செய்யாதது துரதிருஷ்டமானது எனக் குறிப்பிட்டார்.