கேரளாவில் காரின் பின்னால் கயிற்றால் கட்டி நாயை இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொச்சியை அடுத்த நெடும்பாச்சேரி அருகேயுள்ள குன்னம் பகுதியை சேர்ந்த யூசப் என்பவர் தன் காரின் பின்னால் வளர்ப்பு நாயை கயிற்றில் கட்டி இழுத்து சென்றுள்ளார். இந்த காட்சியை கண்ட பொதுமக்கள் பதை பதைத்து போனார்கள். வீட்டில் வளர்த்த செல்லப்பிராணியை வயதான காரணத்தினால் காட்டுக்குள் சென்று விட யூசப் காரில் கட்டி இழுந்து சென்றதாக சொல்லப்படுகிறது . பரவூர் அருகே அகில் என்பவர் இந்த காட்சியை கண்டு வீடியோ எடுத்துள்ளார். அதோடு, யூசப்பிடத்தில். ' ஏன் இப்படி செய்கிறீர்கள்' என்று கேட்டு அகில் சண்டையிட்டுள்ளார். அதற்கு 'இந்த நாய் செத்தால் உனக்கு என்ன?' என்று யூசப் கோபமாக கூறியுள்ளார். பிறகு, பயந்து போன யூசப் கயிற்றை அவிழ்த்து விட்டு காயத்துடன் கிடந்த நாயை ரோட்டில் போட்டு விட்டு காரில் தப்பி ஓடி விட்டார்.
தொடர்ந்து, கேரள விலங்குகள் நல அமைப்புக்கு அகில் தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் நாயை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விலங்குகள் அமைப்பினர் கொடுத்த புகாரின் பேரில் கார் டிரைவரான யூசப்பை மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையே, அகில் தான் எடுத்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவேற்ற அது வைரலானது. இந்த சம்பவம் குறித்து கேள்விபட்ட கேரள போக்குவரத்து துறை அமைச்சர் சசீந்திரன், யூசப்பின் காரை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து, பரவூர் ஆர்.டி.ஓ அதிகாரிகள் யூசப்பின் காரை பறிமுதல் செய்து போலீஸாரிடத்தில் ஒப்படைந்தார். யூசப்பின் டிரைவிங் லைசென்ஸை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.