பிளாஸ்மோடியம் ஓவேல் என்னும் புதிய வகை மலேரியா நோய் கேரளத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில நலவாழ்வுத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.
இதுபற்றித் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர், சூடானில் இருந்து வந்த ராணுவ வீரர் கண்ணூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்குப் பிளாஸ்மோடியம் ஓவேல் என்னும் புதிய வகை மலேரியா நோய் உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சரியான நேரத்தில் சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் நோய்ப் பரவலைத் தடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு நிபா வைரஸ் கேரளத்தின் கோழிக்கோட்டில் கண்டறியப்பட்டதும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் இருந்து கேரளத்துக்கு வந்த மாணவரிடம் இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.