புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், சட்டத் திருத்தத்துக்கான எந்த முன்மொழிவையும் தாங்கள் ஏற்கப்போவதில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் 14ஆம் நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே மத்திய அமைச்சர்களும் விவசாயிகளும் பல சுற்றுப் பேச்சு நடத்தியும் அதில் தீர்வு ஏதும் எட்டப்படவில்லை. இந்நிலையில் மத்திய அரசுடன் இன்று நடத்த இருந்த பேச்சை விவசாயிகள் கைவிட்டனர்.
மேலும் மத்திய அரசின் வரைவு முன்மொழிவை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், வரும் 12ஆம் தேதி டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் 14 நாட்களாகப் போராட்டம் நடத்தி வரும் இந்நிலையில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை வரைவு முன்மொழிவாக விவசாயிகளிடம் வழங்கியது.
அதுபற்றிக் கூடிப் பேசிய விவசாய சங்கப் பிரதிநிதிகள், சட்டத் திருத்தத்துக்கான மத்திய அரசின் வரைவு முன்மொழிவை ஏற்க முடியாது என்றனர். கோரிக்கையை வலியுறுத்தி வரும் 12ஆம் தேதி டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபடப் போவதாகவும், 14ஆம் தேதி பாஜக அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாகவும், டெல்லிக்கு வர பிறமாநில விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.