புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
சன்சத் மார்க் பகுதியில் அமையவிருக்கும் இந்த கட்டடம் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரமடைந்த 75வது ஆண்டு வைர விழா 2022ம் ஆண்டு கொண்டாடப்படும் நிலையில் புதிதாக அதிநவீன வசதிகளுடன் கூடிய இக்கட்டடம் கட்டப்படுகிறது.
தற்போது உள்ள மக்களவை அரங்கை விட மூன்று மடங்கு பெரிய அரங்கு இந்தப் புதிய கட்டடத்தில் இருக்கும். அதே போல மாநிலங்களவை அரங்கும் பெரிதாக்கப்படுகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையுடைய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அரங்குகளின் உள்ளே கலைநயம் மிக்க சித்திரக் காட்சிகள் இடம் பெறும்.
துல்லியமான ஆடியோ வீடியோ வசதிகள், அமர்வதற்கான வசதி மிகுந்த இருக்கைகள், நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடிய உறுதிமிக்க கட்டுமானம் என்று புதிய நாடாளுமன்றக் கட்டடம் அனைத்து சிறப்பு அம்சங்களும் பொருந்தியதாக இருக்கும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.