சுற்றுச்சூழல் முன் அனுமதி உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் உரிய முறையில் பின்பற்றியே சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலைக்கு திட்டமிடப்பட்டது. இந்நிலையில், வழக்கின் பேரில் சென்னை உயர்நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.
உரிய நடைமுறைகளை கடைபிடிக்காமல் திட்டத்திற்காக நிலத்தினை கையகப்படுத்தியது, பெயர் மாற்றம் செய்த முறைகள் தவறு என்றும், கையகப்படுத்திய நிலத்தை மீண்டும் உரிமையாளர்கள் பெயருக்கு மாற்றி கொடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்வதாகவும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.