ஆந்திராவில் கோதாவரி மாவட்டம் ஏலூரில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் காரீயம்-நிக்கல் நச்சு கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கை-கால்கள் வலித்துக் கொண்டு சுருண்டு விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஏலூர் நகரில் கடந்த 4ஆம் தேதி முதல் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள், வேலை செய்து கொண்டிருந்தவர்கள் என பலரும் திடீர் திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்தனர். இன்று காலை வரை ஆண்கள், பெண்கள், சிறார்கள் என 570 பேர் மர்ம நோயின் தாக்கத்தால் அனுமதிக்கப்பட்டு 332 பேர் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பி உள்ளனர். சிலர் விஜயவாடா, குண்டூர் அரசு மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இந்த மர்ம நோயின் தாக்கத்தை உணர்த்தும் சில அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தங்கியிருக்கும் அறையில் ஏதோ ஒரு வேலையில் மும்முரமாக இருந்த நபர் திடீரென கை, கால்களின் இயக்கம் முடங்கி கீழே சரிகிறார்.
இதேபோல, பணியிடத்தில் இருந்து எழுந்து செல்ல புறப்படும் நபர் கை, கால்கள் இழுத்துக் கொள்ள பரிதாபமாக கீழே சரிகிறார்.
இத்தகைய சிசிடிவி காட்சிகள், ஆந்திர மாநிலத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனிடையே, இந்த மர்ம நோயின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய விஜயவாடாவில் இருந்து ஒரு மருத்துவ குழு வந்தது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஒரு மருத்துவ குழுவும், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து ஒரு மருத்துவக் குழுவும், உலக சுகாதார அமைப்பின் சார்பில் ஒரு குழுவும், ஏலூர் வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அருந்திய உணவு, பால், தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் உடலில் காரீயம்-நிக்கல் நச்சு கலந்திருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த நச்சு எவ்வாறு கலந்தது என்று கண்டறியப்படாத நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் முதுகுதண்டில் இருந்து இரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.