வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், இன்று நாடு தழுவிய முழுஅடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய சட்டங்களால், குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு உள்ளிட்டவை அழிந்து, வேளாண்துறை தனியார்வசம் சிக்கிவிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லியை முற்றுகையிட்டு கடந்த 26ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, விவசாயிகள் மத்திய அரசுடன் மூன்று கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் சுமூக தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. இதையடுத்து, இன்று நாடு முழுவதும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்து உள்ளனர். இதற்கு, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் மற்றும் சிவசேனா உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இதனிடையே, அடையாள எதிர்ப்பாக நடைபெற உள்ள முழு அடைப்பு அமைதியான முறையில், காலையில் 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது எனவும் விவசாய சங்கங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.