வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று முழு கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், பாதுகாப்பை கடுமையாக்கி அமைதியை நிலைநாட்டுமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ந்து 13வது நாளாக, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், இன்று நாடு தழுவிய முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதையொட்டி, பாதுகாப்பை கடுமையாக்கி அமைதியை நிலைநாட்டுமாறு, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
போராட்டத்தின் போது, சுகாதாரம் மற்றும் தனி மனித இடைவெளி தொடர்பாக வெளியிடப்பட்ட கொரோனா வழிகாட்டுதல்கள், கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடைகளை மூடவோ அல்லது போக்குவரத்தை நிறுத்தவோ யாராவது வற்புறுத்தினால், அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கவும், போக்குவரத்து, சந்தைகள் என அனைத்தும் வழக்கம் போல் செயல்படுத்தவும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
முழு கடையடைப்பு சமயத்தில் அமைதி பேணப்பட வேண்டும் என்றும், எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.