ராஜஸ்தான் மாநிலத்தில் கல்யாணப்பெண்ணுக்கு கொரோனா என்று தெரிந்ததும், கொரோனோ தனிமை மையத்திலேயே கொரோனோ தடுப்பு உடை அணிந்து தாலி கட்டினார் மாப்பிள்ளை.
ராஜஸ்தான் பாரான் மாவட்டத்தில் நடக்க இருந்த ஒரு திருமணத்தில், திருமண நாள் காலையில் மணப்பெண்ணுக்கு கொரோனோ பாசிட்டிவ் என்று தெரிய வந்தது. அவரை உடனே தனிமை படுத்தியாக வேண்டும், திருமணமே நடக்காது என்ற என்ற சூழல் ஏற்பட்டது. அதனால் கல்யாணப்பெண் மணமுடைந்து போனார்.
ஆனால் மாப்பிள்ளை விடவில்லை. என் மனைவி இவள்தான். அதுவும் இன்றே திருமணம் செய்வேன் என்று முடிவு எடுத்தார். இரண்டு குடும்பத்தார்களும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர். அவர்கள் மாவட்ட சுகாதார அதிகாரியை சந்தித்து பேசினார்கள். பின்பு அவரது சம்மதத்துடன், கொரோனோ தனிமை மையத்திலேயே மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் முழு கொரோனோ தடுப்பு உடையை அணிந்துக்கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.
மாப்பிள்ளையும் மணப்பெண்னும் மட்டுமில்லாமல் அவர்களின் பெற்றோர்களும் சடங்குகள் நடத்தும் புரோகிதரும் முழு கொரோனோ தடுப்பு உடைகளை அணிந்துக்கொண்டனர். அந்த உடையுடனே புரோகிதர் மந்திரங்கள் சொல்லி சடங்குகள் செய்ய, அந்த தடுப்பு உடையுடனே மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் மாலை மாற்றிக்கொண்டார்கள். மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலியும் கட்டினார்.
இது பற்றி பாரான் மாவட்ட சுகாதார அதிகாரி ராஜேந்திர மீனா கூறுகையில், திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னால் மணப்பெண்ணின் மாமாவுக்கு கொரோனோ பாசிட்டிவ் என்று தெரிய வந்தது. பிறகு பலருக்கும் சோதனை செய்து பார்த்தோம். கல்யாணப்பெண்ணுக்கும், அவரது அண்ணிக்கும் கொரோனோ பாசிட்டிவ் என்பது திருமண நாள் காலையில் தான் தெரிய வந்தது. அதன் பிறகு இரு குடும்பத்தாரையும் அழைத்துப் பேசினோம். பின்பு, பலத்த கட்டுப்பாட்டுடன், கொரோனோ தனிமை மையத்திலேயே கொரோனோ தடுப்பு உடை அணிந்து திருமணம் சிறப்பாக நடந்தேறியது என்று கூறியுள்ளார்.