தன் நிலத்தை பிள்ளைகளுக்கு கொடுக்கப்போவதில்லை மோடிஜிக்கு கொடுக்க விரும்புகிறேன் என்று பிள்ளைகளால் கைவிடப்பட்ட பாட்டி பிடிவாதம் பிடித்த அதிசயம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மெயின்பூரி நகரைச்சேர்ந்தவர் பிட்டன் தேவி. இவருக்கு 85 வயதாகிறது. இவர் தன்னிடம் உள்ள ஒரே சொத்தான நிலத்தை பிரதமர் மோடிக்கு கொடுத்தாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்.
பிட்டன் தேவி என்ற அந்த பாட்டி தள்ளாடும் இந்த வயதிலும் கிருஷ்ணா பிரதாப் சிங் என்ற வக்கிலை சென்று பார்த்தார்.அவரிடம் தனக்கு சொந்தமான 12 பிக்ஹா நிலத்தை அதாவது கிட்டத்தட்ட 20 ஏக்கர் நிலத்தை மோடிஜிக்கு அவர் செய்த அனைத்து நல்ல செயல்களுக்காகவும் கொடுக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு கிருஷ்ணா பிரதாப்புடன் இருந்த வழக்கறிஞர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அந்த வயதான பாட்டிற்கு பலர் பலவிதமாக எடுத்து கூறியுள்ளார்கள். உங்கள் நிலம் மோடிக்குத் தேவையில்லை. உங்கள் பாதுகாப்பிற்காக நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியும் அவர் தனது முடிவிலே பிடிவாதமாக இருந்திருக்கிறார். தனது நிலத்தை பிரதமரிடம் கொடுக்குமாறு வழக்கறிஞரிடம் கேட்டுள்ளார்.
பிட்டன் தேவியின் கணவர் காலமாகி விட்டார். தற்போது, அவர் தனது மகன்கள் மற்றும் மருமகள்களை சார்ந்து இருக்க வேண்டிய சூழ் நிலையில் உள்ளார். ஆனால் அவர்கள் அவரை கவனித்துக்கொள்வதில்லை. அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகளால்தான் அவர் வாழ்ந்து வருகிறார்.
தனது சொத்துக்களை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க விரும்பும் 85 வயதான இந்த பாட்டியின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில்,தனது 12 பிக்ஹா நிலத்தை மோடிஜிக்கு அவர் செய்த அனைத்து நல்ல செயல்களுக்காகவும் கொடுக்க விரும்புவதாகக் கூறுகிறார்.
அந்த வீடியோவில், பிட்டன் தேவி மேலும் கூறுகையில், ‘மோடிஜி எனக்கு ஓய்வூதியத்தை அளிக்கிறார். எனது குடும்பத்தினர் என்னை உடல் ரீதியாக தாக்கினர்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் அவருக்காக என்ன செய்தார் என்று கேட்டபோது, ”மோடி எனக்கு பணம் தருகிறார், அவர் எனக்கு ரூ.2000 ஓய்வூதியம் தருகிறார். எனவே, எனது 12 பிக்ஹா நிலத்தை மோடிஜிக்கு தருவேன்” என்று பதிலளித்துள்ளார்.
ஏழு பேரன்கள், மூன்று பேத்திகள் இருந்தும் எல்லோரும் கைவிட்டு விட்டனர் என்று தனது கஷ்டமான நிலைமையை விவரித்த பாட்டி, தான் இறக்க விரும்புவதாகவும், பிரதமர் மோடிஜியின் ஓய்வூதிய திட்டங்கள் மற்றும் கவனிப்பு குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறியுள்ளார்.
அவரது இந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.