சென்னை, கடலூர், ஐதராபாத் மற்றும் மும்பையில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத சுமார் 450 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐ.டி.காரிடரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டல நிர்வாகி, அதன் முன்னாள் இயக்குநர் மற்றும் ஸ்டீல் வர்த்தகர் ஒருவர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. அதை அடுத்து, சென்னை, கடலூர், ஐதராபாத் மற்றும் மும்பையில் அவர்களுக்கு தொடர்புடைய 16 இடங்களில் சோதனை நடைபெற்றது.
அதில் சிறப்பு பொருளாதார மண்டல முன்னாள் இயக்குநரும், அவரது குடும்பத்தினரும், கடந்த 3 ஆண்டுகளில் 100 கோடிக்கும் அதிகமாக கணக்கில் வராத சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் போன்று சிறப்பு பொருளாதார மண்டல நிர்வாகி கட்டுமானத்தில் இருக்கும் திட்டம் ஒன்றுக்கு 160 கோடி செலவழித்ததாக பொய்க்கணக்கு காட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
கடந்த 2017-18 ல் மொரீஷியஸ் வழியாக 2300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டாலும், அதன் மூலம் கிடைத்த லாபம் கணக்கில் காட்டப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இவர்களுடன் தொடர்புடைய ஸ்டீல் வர்த்தகரும் 100 கோடி ரூபாய் அளவிற்கு வருமானத்தை மறைத்து பொய்க்கணக்கு காட்டியது அம்பலமானது.
இந்த சோதனைகளில் கிடைத்த விவரங்களின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என வருமானவரித்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.