மிக்29K விமான விபத்தில் காணாமல் போன பைலட் கமாண்டர் நிஷாந்த் சிங். "தோட்டாவை கடிக்க அனுமதி தாருங்கள்" என்று தலைப்பிட்டு, தன் திருமணத்தைப்பற்றி எழுதிய வேடிக்கையான கடிதம், தற்போது வைரலாகியுள்ளது.
ஐ.என்.எஸ் விக்கிரமாதித்யா விமானத் தாங்கிக் கப்பலில் இருந்து பயிற்சியில் ஈடுபட்ட மிக்29K பயிற்சி விமானம் கடந்த வியாழக்கிழமை அரபிக்கடலில் விபத்துக்குள்ளாகியது. பைலட்டுகளில் ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். மற்றோரு பைலட் கமாண்டர் நிஷாந்த் சிங், இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த மே மாதத்தில் தன் திருமணத்துக்காக தன் உயர் அதிகாரியிடம் விடுமுறை கேட்டு அவர் எழுதிய கடிதம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது , "தோட்டாவை கடிக்க அனுமதி தாருங்கள்" என்று தலைப்பிட்டு, தனது திருமணத்தைப்பற்றி எழுதியிருந்த வேடிக்கையான கடிதம் அது.
"நான் என் மீதே விருப்பமுடன் ஒரு அணுகுண்டைப்போடபோகிறேன். பொருத்தமாக இருப்போமா... சேர்ந்து வாழ முடியுமா என்ற பயிற்சியை 3 வருட காலம் வெற்றிகரமான பரிசோதித்து விட்டு , நானும் நயாப் ரந்தவா வும் மீதமுள்ள வாழ்நாட்களை, ஒருவரை ஒருவர் கொல்லாமல் சேர்ந்து வாழ்வது என்கிற பரஸ்பர உடன்படிக்கைக்கு வந்துள்ளோம். என் விருப்பமுடன் என்னை தியாகம் செய்ய உங்களின் அதிகாரப்பூர்வ அனுமதியை வேண்டுகிறேன். இந்த மோசமான படுகொலைக்கு சாட்சியாகவும் இந்த ஜோடிக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கவும் உங்களை வரவேற்கிறேன்." என்றெல்லாம் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு உயர் அதிகாரியும், எல்லா நல்ல விஷயங்களும் ஒரு நாள் முடிவுக்கு வரும். எங்கள் நரகத்திற்கு உங்களை வரவேற்கிறேன் என்று வேடிக்கையாக பதில் அளித்துள்ளார்.
மே மாதம் 9 ம் தேதி கமாண்டர் நிஷாந்த் சிங் எழுதிய இந்த கடிதம், அவர் இப்போது விமான விபத்தில் காணாமல் போன பின்பு வெளியாகி, வைரலாகியுள்ளது.