அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் என்.ஆர்.சந்தோஷ் தற்கொலை செய்து கொள்ள முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக முதல்அமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக இருந்தவர் என்.ஆர்.சந்தோஷ். பெங்களூரு டாலர்ஸ் காலனியில் இவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த மே மாதத்தில் முதல் அமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போதிருந்து , எடியூரப்பாவின் நம்பிக்கை பெற்றவராக கர்நாடக அரசியலில் வலம் வந்தார்.
இந்தநிலையில், நேற்று இரவு 7 மணியளவில் என்.ஆர்.சந்தோஷ் தன் வீட்டிலுள்ள அறையில் மயங்கி கிடந்தார். சந்தோஷின் குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மருத்துவமனையில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
போலீசார் நடத்திய விசாரணையில், என்.ஆர்.சந்தோஷ் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது தெரியவில்லை . கர்நாடக முதல் அமைச்சர் எடியூரப்பா மருத்துவமனைக்கு நேரில் சென்று என்.ஆர்.சந்தோசின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
எடியூரப்பாவின் நெருங்கிய உறவினர்தான் இந்த சந்தோஷ். இது குறித்து எடியூரப்பா கூறுகையில்,'' நேற்று காலை கூட அவருடன் சேர்ந்த காலையில் நடை பயிற்சி மேற்கொண்டேன். என்ன காரணத்துக்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது தெரியவில்லை. விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
சந்தோஷின் மனைவி பல்லவி கூறுகையில், ''தன் கணவருக்கு அரசியல்ரீதியாக அழுத்தம் இருந்தது. இதன் காரணமாக, தன்னுடைய இடத்தை இழந்து விடும் அச்சத்தில் இருந்தார்'' என்கிறார்.