கிழக்கு லடாக் எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர 8 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், இதுவரை உடன்படிக்கை ஏதும் எட்டப்படவில்லை.
பேச்சுவார்த்தையின் போது படை வீரர்கள், டாங்குகள், கவச வாகனங்கள், பீரங்கிகளை விலக்கிக் கொள்ள பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டாலும், அதை எப்படி செயல்படுத்துவது என்பதில் முரண்பாடு நீடிக்கிறது. எனவே, படைகளை விலக்கிக் கொள்ளும் முறைகள் தொடர்பாக இருதரப்புக்கும் இடையே இன்னும் கருத்தொற்றுமை எட்டப்படவில்லை.
பாங்காங்சோ தென்கரை - சூசுல் பகுதியில் மலைத்தொடர்களில் சிகரங்களை கைப்பற்றி, சாதகமான நிலையில் இந்திய ராணுவ நிலைகள் உள்ளன. எனவே அங்கிருந்து படைகளை விலக்கிக் கொள்ளத் தொடங்க வேண்டும் என சீனா பிடிவாதமாக உள்ளது. அதேசமயம், பாங்காக்சோ ஏரியின் வடகரையில், ஃபிங்கர் ஏரியாவில் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு சீனாவின் ஆக்கிரமிப்பு உள்ளது.
அங்கிருந்து படை விலக்கம் தொடங்க வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. இது முதன்மையான கருத்து வேறுபாடாகவும், எவ்வளவு தூரம் பின்வாங்கிச் செல்வது மற்றும் தெப்சாங் சமவெளி பகுயில் இந்திய ராணுவத்தின் ரோந்து பணிகளை சீனா தடுப்பது தொடர்பாகவும் முரண்பாடுகள் நீடிக்கின்றன.
15 ஆயிரம் அடி உயரத்தில் மைனஸ் 20 டிகிரி கடுங்குளிர், உறைபனி, ஆக்சிஜன் பற்றாக்குறை, எலும்புகளை சில்லிடச் செய்யும் காற்று என வீரர்கள் சவாலான எல்லைக் காவல் பணியை மேற்கொண்டுள்ளனர். இந்திய வீரர்கள் இத்தகைய நிலைக்கு ஏற்கெனவே பழகியவர்கள் என்பதோடு, வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள், சாதனங்கள், கருவிகளை விநியோகித்துள்ளது. ஆனால் சீன ராணுவத்தினர் முதல் முறையாக இத்தகைய நிலையை எதிர்கொள்கிறார்கள். இந்த பின்னணியில், 9ஆம் சுற்று பேச்சுவார்த்தைக்கான தேதியை சீனா உறுதிப்படுத்தாமல் உள்ளது.