கொரோனா தடுப்பு மருந்தை விநியோகிப்பது தொடர்பாக நாளை அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் காணொலி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. டிசம்பர் இரண்டாவது வாரம் அல்லது ஜனவரியில் இந்தியாவுக்கு தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அவசர சிகிச்சைகளுக்கு அந்த மருந்தைப் பயன்படுத்துவது குறித்தான சாத்தியங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் நாளையும், நாளைமறுநாளும் காணொலி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார்.
முதல் நாளில் எட்டு மாநில முதலமைச்சர்கள் ஆலோசனையில் கலந்துக் கொள்கின்றனர். இரண்டாவது நாளில் எஞ்சிய மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்குத் தளர்வுகள் இடையே கொரோனா தடுப்பு மருந்தை யாருக்கு எப்படி பயன்படுத்துவது என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் ஆலோசனைகளை வழங்க உள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருந்தாலும், நாளைய ஆலோசனையில் பங்கேற்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.