ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை மருத்துவம் மேற்கொள்ள அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை மருத்துவப் பயிற்சி பெறவும், அறுவை மருத்துவம் செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பொது அறுவை, காது மூக்கு தொண்டை, கண் மருத்துவம், முட நீக்கியல், பல்மருத்துவம் ஆகியன சார்ந்த அறுவைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆயுர்வேத மருத்துவமனைகளில் 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அறுவை மருத்துவம் செய்யப்பட்டு வருவதாகவும், அரசின் அறிவிப்பு அதைச் சட்டப்படி ஏற்பதற்கானது என்றும் நாட்டு மருத்துவ மத்தியக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள இந்திய மருத்துவர்கள் சங்கம், ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அறுவை மருத்துவப் பயிற்சி அளிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.