இந்தியாவுக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் யாரும் உயிருடன் திரும்பிச் செல்ல முடியாது என்று ராணுவத் தளபதி நரவனே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீவிரவாதிகளின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்ட ராணுவத்தின் உளவுத்துறையினர், ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் சதித்திட்டத்தை நிறைவேற்ற இருப்பது தெரிய வந்ததையடுத்து உஷாராகினர்.
சிறிய சரக்கு வாகனத்தில் ஏகே.47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் தீவிரவாதிகள் செல்வதை அறிந்து, அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
நேற்று அதிகாலை ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நாகரோடா சுங்கச்சாவடி அருகே பயங்கர ஆயுதங்களுடன் வந்த மினி டிரக்கை தடுத்து நிறுத்த ராணுவ அதிகாரிகள் முயன்றனர். அதில் இருந்த 4 பேரை சரண் அடையும் படி எச்சரித்த போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு ராணுவத்தினரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். நாற்பது நிமிடங்களுக்குப் பிறகு தீவிரவாதிகள் சரண் அடைய மறுத்ததையடுத்து, அவர்களின் வாகனத்தை ராணுவத்தினர் வெடிகுண்டு வீசித் தகர்த்ததில் 4 தீவிரவாதிகளும் உயிரிழந்தனர்.
புல்வாமா பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஜெய் ஷே முகமது இயக்கத் தீவிரவாதிகளின் சதித்திட்டம் இந்திய ராணுவ வீரர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட பகுதியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.