அசாமில் விமான நிலையம் அருகே ராணுவ உடையில் நடமாடிய 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கவுகாத்தி விமான நிலையம் அருகே ரோந்தில் ஈடுபட்டிருந்த போலீசார், அங்கு சந்தேகப்படும்படி ராணுவ உடையில் சுற்றிய 4 பேரை பிடித்தனர்.
விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பேசியதுடன், அடையாள அட்டைகளை 4 பேரும் கொடுக்கவில்லை. இதையடுத்து 4 பேரை முதலில் கைது செய்த போலீஸ், பிறகு அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 7 பேரை சுற்றி வளைத்தனர்.
அதிக பாதுகாப்பு கொண்ட பகுதியில் ராணுவ உடையில் 11 பேரும் ஏன் நடமாடினர் என விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் தங்கியிருந்த வீட்டில் போலி அடையாள அட்டைகள், போலி ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் கடந்த ஒரு மாதமாகவே அப்பகுதியில் தங்கியிருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.