வாராக்கடன் அதிகரிப்பால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகத்தில், ரிசர்வ் வங்கி தலையிட்டு அதன் வர்த்தகத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. டி.பி.எஸ். வங்கியுடன் இந்த வங்கியை இணைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கரூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லஷ்மி விலாஸ் வங்கிக்கு, இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் வாராக்கடன் பல மடங்கு அதிகரித்து கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து இழப்பையே சந்தித்து வரும் லஷ்மி விலாஸ் வங்கி, நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் மட்டும் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பை சந்தித்துள்ளது.
வாராக்கடன் அதிகரிப்பு, வாடிக்கையாளர்கள் பணத்தை தொடர்ந்து கணக்கில் இருந்து எடுத்தது மற்றும் குறைந்த அளவிலான பணப்புழக்கம் ஆகியவை, வங்கியின் மோசமான நிலைக்கு முக்கிய காரணங்களாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடனில் இருந்து மீட்கும் நோக்கில் லஷ்மி விலாஸ் வங்கியின் நிர்வாகத்தில் தலையிட்டுள்ள ரிசர்வ் வங்கி, வரும் டிசம்பர் 16ம் தேதிவரை வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக, 25 ஆயிரம் ரூபாய் வரையே எடுக்க முடியும் என கட்டுப்பாடு விதித்துள்ளது. வாடிக்கையாளர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, லஷ்மி விலாஸ் வங்கியை கைப்பற்ற பல்வேறு நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இதில், டிபிஎஸ் இந்தியா வங்கி முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வங்கியின் வலுவான இருப்புத் தொகை, குறைந்த அளவிலான வாராக்கடன் மற்றும் மூலதனத்தின் ஆரோக்கியமான நிதிநிலை போன்றவை இதற்கு காரணங்களாக உள்ளது. மேலும், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் டிபிஎஸ் வங்கி கிளைகளை வைத்திருப்பதால் லஷ்மி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்களான வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் சேவையை வழங்கும் திறனை கொண்டுள்ளது.
உள்நாட்டு செயல்பாடுகளை சொந்த துணை நிறுவனமாக மாற்றியுள்ள டிபிஎஸ் வங்கி நிர்வாகம், லஷ்மி விலாஸ் வங்கியின் மூலம் சேவையை விரிவுபடுத்த விரும்புவதாக கூறப்படுகிறது. நிதி நெருக்கடியில் சிக்கிய எஸ் வங்கியை தொடர்ந்து, மற்றொரு தனியார் வங்கியான லஷ்மி விலாஸ் வங்கியும், ஒரே ஆண்டில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.