குழந்தைப் பருவத்தில் ராமாயண, மகாபாரதக் கதைகளைக் கேட்டதாகவும், மகாத்மா காந்தியால் தனக்கு இந்தியா மீது ஈர்ப்பு வந்ததாகவும் அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
'ஏ பிராமிஸ்டு லேண்டு' என்னும் பெயரில் அவர் எழுதியுள்ள நூலில், இந்தோனேசியாவில் தான் வளர்ந்தபோது ராமாயண, மகாபாரதக் கதைகளைக் கேட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கையும், இரண்டாயிரம் இனக் குழுக்களையும், எழுநூற்றுக்கு மேற்பட்ட மொழிகளையும் இந்தியா கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தியால் தான் இந்தியா மீது தனக்கு ஈர்ப்பு வந்ததாகவும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அகிம்சைப் போராட்டத்தைக் கையாண்ட அவர் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களுக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.