பீகார் முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார் தொடர்ந்து 4ஆவது முறையாக இன்று பதவியேற்கவுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து, பாட்னாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் முன்னிலையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார் முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை மாநில ஆளுநரிடம் வழங்கிய பிறகு நிதிஷ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இன்று மாலை 4 மணி அளவில் மாநில முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தெரிவித்தார்.
69 வயதாகும் நிதிஷ் குமார், இதுவரை தொடர்ந்து 3 முறை பீகார் முதலமைச்சராக ஆட்சி புரிந்துள்ளார். இன்று அவர் பதவியேற்க இருப்பது தொடர்ந்து 4ஆவது முறையாகும். இதன்மூலம், 7வது முறையாக அவர் பீகார் மாநில முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
இதனிடையே, பாஜகவை சேர்ந்த டர்கிசோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டு முறை துணை முதலமைச்சராக இருந்த சுஷில் மோடி மத்திய அமைச்சரவையில் இடம்பெறலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.