தீபாவளிப் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், சமூகத்தின் பல பிரிவினரால் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை, இந்திய சமுதாயத்தை ஒருங்கிணைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் வாழ்த்துச் செய்தியில், நாட்டை பாதுகாக்க அச்சமின்றி போராடும் நமது வீரர்களுக்காக தீபாவளியன்று விளக்கேற்றுவோம் என தெரிவித்துள்ளார். நமது வீரர்களின் தைரியத்திற்கு நன்றியுணர்வை வெளிப்படுத்த வார்த்தைகளால் முடியாது எனவும், எல்லையை பாதுகாக்கும் வீரர்களின் குடும்பத்திற்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , நல்லிணக்கத்தையும், அமைதியையும், ஆரோக்கியத்தையும் தீபாவளி திருநாள் வாரி வழங்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது வாழ்த்துச் செய்தியில், தீப ஒளித் திருநாள், அறத்தின் ஆட்சியையும், ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாளாகவும், காரிருள் மறைந்து, அறிவொளி பிறந்து, இன்பமும், இனிமையும் நிறைந்த நன்னாளக விளங்குவதாகவும், குறிப்பிட்டுள்ளார். மகிழ்ச்சி பொங்க அனைவரும் சேர்ந்து இனிமையான தீபாவளியை கொண்டாடுவோம் என, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.