தீபாவளியையொட்டி உள்நாட்டுப் பொருட்களையே வாங்கும்படி நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் 614 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவடைந்த வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அப்போது காணொலியில் உரையாற்றிய அவர், தீபாவளியையொட்டி உள்நாட்டுப் பொருட்களையே வாங்க வேண்டும் என மக்களைக் கேட்டுக்கொண்டார்.
இது உள்நாட்டுத் தொழிலை ஊக்குவித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை வழங்கச் செய்யும் எனத் தெரிவித்தார். வெளிநாட்டுப் பொருட்களை வாங்குவதை நிறுத்தவோ, ஏற்கெனவே வாங்கியிருந்தால் அவற்றை வீசி எறியவோ தான் கூறவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.