காலாவதியான பழைய ஆயுதங்களை கொடுத்து, மியான்மர், வங்கதேசம்... அவ்வளவு ஏன்... நெருங்கிய கூட்டாளியான பாகிஸ்தானையும் சீனா ஏமாற்றியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 1970- ஆம் ஆண்டு முதல் தான் பயன்படுத்தி வந்த அதர பழைய மிங் ரகத்தைச் சேர்ந்த இரண்டு 035ஜி ரக நீர்மூழ்கிக்கப்பல்களை வங்கதேசத்துக்கு சீனா வழங்கியது. ஒவ்வொன்றையும் தலா 100 மில்லியன் யு.எஸ் டாலர்கள் கொடுத்து வாங்கிய வங்கதேசம் பி.என்.எஸ் நபோஜத்ரா, ஜோய்சத்ரா என்று புது பெயர் சூட்டி சந்தோஷமாக தன் கடற்படையில் இணைத்து கொண்டது ஆனால், வங்கதேசத்தின் மகிழ்ச்சி 2 ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. சீனா கொடுத்த இரண்டு நீர்மூழ்கிக்கப்பல்களுமே தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயக்கமுடியாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பட்டும் திருந்தாத வங்கதேசம் மீண்டும் 2020 - ஆம் ஆண்டு 2 போர்க்கப்பல்களை சீனாவிடமிருந்து வாங்கியது. இரண்டுக்கும் புது பெயர் சூட்டி தன் கடற்படையில் இணைத்தது. வாங்கி 6 மாதங்கள் கூட ஆகவில்லை, ரேடார் இயங்கவில்லை. கப்பலில் பொருத்தப்பட்டுள்ள துப்பாக்கி தொழில்நுட்பத்திலும் கோளாறாகிப் போது. அடுத்ததாக நேபாளத்துக்கு போவோம். சீன தயாரிப்பான ஒய்12இ மற்றும் எம்.ஏ 60 ரக விமானங்கள் 6 நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக வாங்கப்பட்டன. தற்போது, இந்த ரக விமானங்கள் பறக்க முடியாமல் , வீணாகி போய் கிடக்கின்றன.
மியான்மர் நாட்டு ராணுவத்துக்கும் சீனா கொடுத்த ஆயுதங்களில் திருப்தி இல்லையென்று அந்த நாடு கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால், சீன பொருள்களை தவிர்த்து விட்டு இந்திய தயாரிப்புகளை வாங்க மியான்மர் முடிவு செய்துள்ளது. இந்தியாவிடமிருந்து சிந்துவீர் ரக நீர்மூழ்கிக்கப்பல்களை வாங்க அந்த நாடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது .
ஆட்டை கடித்து மாட்டை கடித்த கதையாக அண்டை நாடுகள், பக்கத்து நாடுகளுக்கு கலாவதி ஆயுதங்களை கொடுத்த சீனா , தன் நெருங்கிய கூட்டாளியான பாகிஸ்தானையும் விட்டு வைக்கவில்லை. பாகிஸ்தான் தன் கடற்படைக்காக பழுதுபார்க்கப்பட்ட எஃப் 22 பி போர் கப்பல்களை சீனாவிடமிருந்து பெற்றது. ஆனால், தொழில்நுட்பக் குறைபாடுகளால் அந்த கப்பல்கள் முடங்கிக்கிடக்கின்றன. அதே போல ,சீனாவிலிருந்து நகரும் LY-80 LOMADS ரக ஏவுகணை அமைப்பு 9 - ஐ பாகிஸ்தான் வாங்கியது. இதில், 3 ஏவுகணைகள் நகரவே முடியாமல் கிடக்கின்றன.
சீனாவின் சீட்டிங் கதை இத்துடன் முடியவில்லை. அப்பாவி ஆப்ரிக்க நாடுகளுக்கும் காலாவதி ஆயுதங்களை சீனா விற்று ஏமாற்றியுள்ளது. சீன ஆயுதங்களை டெஸ்ட் செய்த போதே உயிர்ப்பலிகள் நிகழ்ந்ததும் உண்டு. கடந்த 2016 - ஆம் ஆண்டு சீன அரசுக்கு சொந்தமான சோங்கிங் டைமா இண்டஸ்ட்ரீஸ் தயாரித்த VN-4 ரக கவச வாகனங்களை கென்யாவுக்கு விற்க சீனா திட்டமிட்டது. இதற்காக, தங்கள் கவச வாகனங்களுடன் விற்பனை பிரநிதிகளை கென்யாவுக்கு சீனா அனுப்பி வைத்தது. சோதனையின் போது, தங்கள் நாட்டு தயாரிப்பு மீது நம்பிக்கை இல்லையோ என்னவோ தெரியவில்லை... சீன பிரதிநிதிகள் கவச வாகனத்தில் நாசுக்காக ஏறவில்லை. கென்ய போர் வீரர்கள் மட்டுமே கவசவாகனத்தில் ஏறியிருந்தனர். சோதனையின் போது , கவசவாகனத்துக்குள் குண்டுகள் பாய, சில கென்ய வீரர்கள் பரிதாபமாக இறந்து பேனார்கள். சீன பிரதிநிதிகள் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்றவாரே ஓடியே போய் விட்டனர்.
மற்றோரு ஆப்ரிக்க நாடானா அல்ஜீரியாவும் சீனாவிடம் ஏமாந்துள்ளது. சீனாவிடமிருந்து CH-4B UCAV ரக ட்ரோன்கள் மூன்றை அல்ஜீரியா வாங்கியிருந்தது. 2013 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக விபத்துகளில் சிக்கி இந்த மூன்று ட்ரோன்கள் அழிந்து போய் விட்டன. மேற்காசிய நாடான ஜோர்டானும் 2016 முதல் 2019 ஆம் ஆண்டுக்குள் 6 CH-4B UCAV ரக ட்ரோன்களை சீனாவிடமிருந்து வாங்கி ஏமாந்து போனது. தற்போது, இந்த ரக ட்ரோன்களை ஜோர்டான் விற்பனைக்கு வைத்துள்ளது.
சீன பொருள்கள் என்றாலே, ஓடும்.. ஆனால் ஓடாது என்பது உண்மைதானோ?