இந்திய ராணுவம் மேற்கொண்ட உறுதியான, திடமான பதில் நடவடிக்கைகளால்,கிழக்கு லடாக்கில் எடுத்த தவறான நடவடிக்கைகளின் எதிர்பாராத பலன்களை, சீன ராணுவம் அனுபவித்து வருவதாக, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு கல்லூரி ஏற்பாடு செய்த இணையவழி கருத்தரங்கு ஒன்றில் இவ்வாறு கூறிய அவர், எல்லையில் பதற்றம் நீடித்தாலும், இந்தியாவின் நிலைப்பாடு எந்த குழப்பமும் இன்றி உள்ளது என்றார்.
இந்தியாவுடன் போர் நடத்தியுள்ள சீனாவும், பாகிஸ்தானும் இப்போது இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் சேர்ந்து செயல்படுகின்றன என அவர் கூறினார்.
பாலாகோட் சர்ஜிகல் தாக்குதலுக்குப் பின்னர், இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதால் ஏற்படும் விளைவுகளை பாகிஸ்தான் புரிந்து கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.