அடுத்த வாரம், காத்மாண்டுவில் நடக்க உள்ள இந்திய ராணுவ தளபதி எம்எம் நரவானே-நேபாள பிரதமர் கே.பி.சர்ம ஒலியை சந்திப்பை தொடர்ந்து, இந்திய, நேபாள வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் மீண்டும் துவங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய பகுதிகளான லிம்பியுத்ரா, காலாபானி, லிபுலேக் ஆகியவற்றை தனது பகுதிகளாக சித்தரித்து நேபாளம் புதிய வரைபடத்தை கடந்த ஜூனில் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து நேபாள அரசுடனான பேச்சுவார்த்தைகளை இந்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இரு நாடுகளிடமும் இருந்த கசப்புணர்வு மறந்து உறவுகளை மீண்டும் துவக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் ஒரு கட்டமாக, புதிய வரைபடம் அடங்கிய பாடநூல்களை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என்ற முடிவை சர்ம ஒலி எடுத்தார். நரவானேயின் இந்த பயணத்தின் போது அவருக்கு நேபாள ராணுவத்தின் கவுரவ ஜெனரல் பதவி வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளது.