சரக்கு சேவை வரி வருவாய் பிப்ரவரி மாதத்துக்குப் பின் அக்டோபரில் மீண்டும் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
சரக்கு சேவை வரி வருவாய் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு லட்சத்து ஐயாயிரத்து 366 கோடி ரூபாயாக இருந்தது. கொரோனா சூழல், ஊரடங்கு ஆகியவற்றால் மார்ச் மாதத்தில் இருந்து வரி வருவாய் வீழ்ச்சியடைந்தது.
மே மாதத்துக்குப் பின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் முழு வேகம் பெற்றுள்ளன. இதையடுத்து வரி வருவாய் வீழ்ச்சியில் இருந்து படிப்படியாக வளர்ச்சிப் பாதையை அடைந்தது.
இந்நிலையில் அக்டோபரில் சரக்கு சேவை வரி வருவாயாக ஒரு லட்சத்து ஐயாயிரத்து 155 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும், 80 லட்சம் பேர் வரி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளதாகவும் மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபரில் கிடைத்த வரி வருவாயைவிடப் பத்து விழுக்காடு அதிகமாகும்.