தங்கக்கடத்தல் விவகாரம், போதைப் பொருள் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் மகன் கைது... இப்படியெல்லாம் கேரள அரசியலில் புயல் சுழன்றடித்துக் கொண்டிருக்க, எதை பற்றியும் கருத்து கூறாமல் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மழுப்பி வருகிறார்.
கேரளாவில் ஸ்வப்னா என்ற புயல் சுழன்றடிக்க கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கர் அதில் சிக்கி சின்னாபின்னமாகிக் போனார். அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு டிப்ளோமெடிக் பார்சல் என்ற பெயரில் கிலோக்கணக்கில் தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது. இந்தக் கடத்தலுக்கு மூளையாக இருந்தவர் ஸ்வப்னா. இந்த ஸ்வப்னாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் சிவசங்கர் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. அமீரகத்திலிருந்து கொச்சிக்கு 21 முறை தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் சிவசங்கருக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 - ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமீரகத்திலிருந்து வந்த டிப்ளோமெடிக் பார்சலை விடுவிக்க தானே நேரடியாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் பேசியதாகவும் சிவசங்கர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
பினேஷ் கொடியேறி
தற்போது, இந்த வழக்கில் 5- வது குற்றவாளியாக சிவசங்கர் சேர்க்கப்பட்டுள்ளார். குற்றச்சாட்டுக்குள்ளான சிவசங்கரை முதன்மைச் செயலாளராக பினராயி விஜயன் நேரடியாகத் தேர்ந்தெடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், பினராயி விஜயனோ இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்த நிலையில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பினராயி விஜயன் அளித்த பதிலில், சிவசங்கரின் தனிப்பட்ட செயல்பாடுகளுக்கு தன் அரசு பொறுப்பாகாது என்றும் தான் முதல்வர் ஆன பிறகே சிவசங்கரைத் தெரியும் எனவும் தன்னிடம் கொடுக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பட்டியலிலிருந்து அவரை முதன்மைச் செயலாளராகத் தேர்வு செய்ததாக தெரிவித்துள்ளார்.
தங்கக்கடத்தல் விவகாரமே முடிவுக்கு வராத நிலையில் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினேஷ் கைது செய்யப்பட்டுள்ளது பினராயி விஜயன் அரசுக்கு மேலும் அவப் பெயரை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வரின் முதன்மைச் செயலாளர் தங்கக்கடத்தல் வழக்கில் கைது, கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரின் மகன் போதை பொருள் வழக்கில் கைது என பினராயி விஜயனின் அரசியல் எதிரிகள் அவரை பொலி போட்டு வருகிறார்கள். ஆனால், செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பினேஷின் கைது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் பினராயி விஜயன் வாய் மூடி மவுனியாகி விட்டார். இதற்கிடையே, கேரள இடது சாரி கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் கூறுகையில், ”போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பினேஷின் செயல்களுக்கு அவரின் தந்தை கொடியேறி பாலகிருஷ்ணன் பொறுப்பாக மாட்டார். பினேஷ் ஒன்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் அல்ல'' என்று கருத்து வெளியிட்டுள்ளார்.