கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெங்களூருவில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் பல இடங்களில் சோதனை நடத்தினர். இதில் , முகமது அனுப் என்பவர் கைது செய்யப்பட்டார். அனுப்பிடமிருந்து ஏராளமான போதை பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில், அனுப்புடன் கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினேசுக்கு ‘தொடர்பு இருந்ததாக சொல்லப்பட்டது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை ஏற்கெனவே அக்டோபர் 6- ஆம் தேதி பினேஷிடத்தில் விசாரித்தது. தொடர்ந்து, இரண்டாவது கட்ட விசாரணைக்காக பெங்களூரு சாந்தி நகரிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜரான பிஜேஷை கைது செய்த அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் . பினேஷை 4 நாள்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அனுப்பிடத்தில் பரப்பன அக்ரஹார சிறையில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, பினேஷிடத்திலிருந்து பல முறை பணம் பெற்றதாக அனுப் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும், பெங்களூருவில் பல பினாமி கணக்குகளிலிருந்து ரூ.50 லட்சம் வரை அனுப் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. பினேஷின் உத்தரவின்படியே, அவருக்கு நெருக்கமானவர்கள் இந்த தொகையை அனுப்பியதாக சொல்லப்படுகிறது.