இந்திய கடற்படைக்கு வலு சேர்க்கும் எப்-18 ரக போர் விமானங்கள், ஆளில்லா தாக்குதல் விமானங்கள் குட்டி போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது.
இந்திய விமானம் தாங்கி கப்பலான விக்கிரமாதித்யா மற்றும் தற்போது கட்டப்பட்டு வரும் கப்பல்களில் பயன்படுத்த 57 விமானங்களை வாங்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது.
இதனிடையே கப்பல்களில் பயன்படுத்தும் எப்-18 ரக விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்க முன்வந்துள்ளது. 56 அடி நீளமும், 15.5 அடி உயரமும் கொண்ட எப்-18 ரக விமானத்தில் இருவர் பயணிக்கலாம்.
மணிக்கு 1915 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் இந்த விமானம், 50 ஆயிரம் அடி உயரம் வரை செல்லும். விண்ணில் இருந்து தரை இலக்கு மற்றும் கப்பல்களை தாக்கும் ஏவுகணைகள், அணுகுண்டுகளை தாங்கி சென்று வீசும் வல்லமை இந்த விமானங்களுக்கு உண்டு.
இதுதவிர சீ கார்டியன் என்னும் ஆளில்லா விமானங்களையும் விற்பனை செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது.
36 அடி நீளமும், 16.6 அடி உயரமும் கொண்ட இந்த ஆளில்லா விமானத்தை கட்டுப்பாட்டு தளத்தில் இருந்து இயக்க இருவர் போதும். மணிக்கு 482 கிலோ மீட்டர் வேகத்தில், தொடர்ந்து 14 மணி நேரம் பறக்கும் வல்லமை கொண்டது.
ஏவுகணைகளை தாக்கி சென்று வீசி இலக்கை அழிக்கும் வல்லமை கொண்டது இந்த ஆளில்லா விமானம். மேலும் ராணுவ கண்காணிப்பு மற்றும் தாக்குதலுக்கு உதவும் டிரோன்களையும் விற்பனை செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது.
இதனிடையே லடாக் எல்லையில் சீனாவின் படை குவிப்பு, படைகளின் முகாம், அவற்றின் நகர்வு குறித்த தகவல்களையும், அமெரிக்கா, இந்திய அரசுக்கு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.