ஹரியானாவில் கல்லூரி மாணவியை நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏவின் உறவினர் உள்பட இரண்டு பேரை போலீசார் 2 மணி நேரத்தில் கைது செய்தனர்.
ஹரியானா மாநிலம் ஃபரீதாபாத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பட்டப்பகலில் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி ஊடகங்களில் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. மாணவியைக் கொன்று காரில் வந்தவர்கள் தப்பிச் சென்றனர்.
கொல்லப்பட்ட மாணவியின் பெயர் நிகிதா தோமர் என்று போலீசார் தெரிவித்தனர். மாணவியை கொன்றவர்களை கைது செய்யக் கோரி அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தவ்சீப் Tauseef மற்றும் ரேகான் ஆகிய இரண்டு பேரை போலீசார் இரண்டு மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.
நிகிதாவை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி வந்த மதம் மாற தவ்சீப் கூறியதாகவும் நிகிதா மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகிதாவை துன்புறுத்திய வழக்கில் பஞ்சாயத்துக்கூட்டி சமாதானம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் நிகிதா மீது ஆத்திரத்தில் இருந்த தவ்சீப் தனது நண்பனுடன் வழிமறித்து சுட்டுக் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு இரண்டு நாள் போலீஸ் காவலில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர்.
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உறுதியளித்துள்ளார். கைதான இருவரில் தவுசீப் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் உறவினர் என்று தெரிய வந்துள்ளது.