எல்லையில் அத்துமீறல் விவகாரத்தில் இந்தியாவின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக மேற்குவங்க மாநிலத்தை ஒட்டிய எல்லை நிலவரத்தை ஆய்வு செய்து வரும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்குள்ள ராணுவ முகாம்களில் ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். டார்ஜிலிங் ராணுவ தளத்திற்கு சென்ற ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்களோடு இணைந்து, தேசப்பக்தி முழக்கங்களை எழுப்பினார்.
தொடர்ந்து ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், அண்டை நாடுகளுடன், இந்தியா நட்புறவு பாராட்டவே விரும்புவதாக தெரிவித்தார். அதேவேளையில், இந்திய தாய்திருநாட்டை காப்பதற்காக, கால்வான் பள்ளத்தாக்கில், வீரர்கள் 20 பேர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்ததை அவர் குறிப்பிட்டார்.
பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை, அண்டை நாடுகள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று, பாகிஸ்தானையும், சீனாவையும், ராஜ்நாத்சிங் மறைமுகமாக எச்சரித்தார்.
தொடர்ந்து அங்கு நடைபெற்ற பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளிலும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார்.
இதனிடையே, சிக்கிம் மாநிலத்தில் காங்டாக்-நாதுலா இடையே எல்லைச் சாலைகள் அமைப்பால் அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். சுக்னாவிலுள்ள இந்திய ராணுவத்தின் 33ஆவது படைப்பிரிவு தலைமையகத்தில் இருந்தபடி காணொலி மூலம் அந்த சாலையை அவர் திறந்து வைத்தார்.