பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டாலும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தவறாது பின்பற்ற வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் தொடங்குவதை முன்னிட்டு, காணொலி காட்சி மூலம் வங்க மொழியில் பேசிய அவர், கொரோனா பரவலுக்கு இடையே துர்கா பூஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றார்.
கொண்டாட்டங்களில் குறைந்த அளவில் மக்கள் பங்கேற்றாலும், உற்சாகத்திற்கு குறைவு இல்லை என்று அவர் கூறினார். கொண்டாடங்களில் ஈடுபடும் அதே நேரத்தில் முகக் கவசங்களை தவறாமல் அணிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து பாடுபடுவதாக அவர் குறிப்பிட்டார். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 30 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதாகவும், 90 லட்சம் இலவச எரிவாயு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.