கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதத்தில் இந்தியா முன்னிலையில் உள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பெரும் சவால்கள் தொடர்பான 16வது ஆண்டு கூட்டம், உலகத்திற்காக இந்தியா எனும் தலைப்பில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் இந்தியாவில் தான் அதிகமாக உள்ளது என தெரிவித்தார். குணமடைவோர் விகிதம் 88 சதவிகிதமாக உள்ளதாகவும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை இந்தியா அமல்படுத்தியது தான் இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டு பேசினார். மேலும், கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா முன்னிலையில் உள்ளது என்றார்.
இந்தியா சிறந்த அறிவியல் விஞ்ஞானிகளையும் நிறுவனங்களையும் கொண்டுள்ளதாகக் கூறிய மோடி, கொரோனாவுக்கு எதிரான போரில் அவர்கள் தான் மிகப் பெரிய சொத்து என பெருமிதத்துடன் தெரிவித்தார்.