புதுச்சேரியில் ஆன்லைனில் ரம்மி விளையாடி சுமார் 30 லட்ச ரூபாய் வரை இழந்து, மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர், தன் மனைவிக்கு உருக்கமாக பேசி அனுப்பிய ஆடியோ வெளியாகியுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு எவ்வளவு போலியானது என்பதையும் எத்தனை விபரீதமானது என்பதையும் இந்த இளைஞரின் தற்கொலை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.
புதுச்சேரி கோர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர், 2 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துவிட்டு போலீசில் புகாரளித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை விஜயகுமாரின் எரிந்த நிலையிலான சடலத்தை நத்தமேடு ஏரிக்கரையில் இருந்து போலீசார் மீட்டனர். பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்திருக்கிறது.
தற்கொலை செய்துகொள்வதற்கு முன் தன் மனைவிக்கு உருக்கமாக பேசி அவர் அனுப்பியிருந்த சில வாட்சப் ஆடியோக்கள் வெளியாகியிருக்கின்றன.
தமிழ்நாடு - புதுச்சேரி அளவிலான வோடபோன் விற்பனை முகமையை எடுத்து நடத்தி வந்த விஜயகுமார், செல்போன் விற்பனை மற்றும் ரீசார்ஜ் கடையும் நடத்தி வந்துள்ளார். இதனால், அவரிடம் லட்சக்கணக்கில் பணம் புழங்கியிருக்கிறது.
இந்த நிலையில்தான் அவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டு அறிமுகமாகி இருக்கிறது. ரம்மி விளையாட்டில் மொத்தமாக மூழ்கிய விஜயகுமாரின் வங்கி இருப்பு கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்கி இருக்கிறது.
போதை போல ஆன்லைன் ரம்மி விளையாட்டு தன்னை ஆக்கிரமிக்கத் தொடங்கி, இரவு பகல் பாராமல் விளையாடி சுமார் 30 லட்ச ரூபாய் வரை இழந்துவிட்டேன் என ஆடியோவில் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
தொழிலில் கொடிகட்டிப் பறந்த தாம் ஆன்லைன் ரம்மியால் தனது கௌரவம், பணம், நற்பெயர் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாகவும் ஆடியோவில் கதறுகிறார் விஜயகுமார்.
தந்தை இல்லாமல் தன் மகள் தவிக்கக்கூடாது என்பதற்காக தற்கொலைக்கு முன் குழந்தையையும் கொன்றுவிடலாம் என்று எண்ணியதாக விஜயகுமார் கூறியிருப்பதுதான் அதிர்ச்சியின் உச்சம்.
பெரும் பணத்தையோ, பொருளையோ, அசையும் - அசையா சொத்துகளையோ பணயமாக வைத்து ஆடும் சூதாட்டம் அக்காலத்தில் பல உயிர்களை காவு வாங்கியதால் அது குற்றச்செயலாகப் பார்க்கப்பட்டு வருகிறது.
அப்படிப்பட்ட சூதாட்டம் தற்போது ஆன்லைன் வடிவம் பெற்றிருக்கிறது. இது இன்னும் பல உயிர்களை பலி வாங்குவதற்கு முன் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பு.