நாட்டில் கொரோனா பரவல் நிலவரம் மற்றும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் அதை விநியோகிப்பது குறித்து டெல்லியில் நேற்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ரா, மூத்த விஞ்ஞானிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும்போதிலும், அதை தொடர்ந்து கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
கொரோனா மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும், நாட்டின் அனைத்து பகுதி மக்களுக்கும் அது விரைந்து விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென்று பிரதமர் வலியுறுத்தினார். தேர்தல் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் ஈடுபடுத்தப்படுவதை போல, கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்திலும் ஈடுபடுத்தப்பட வேண்டுமெனவும், தகவல் தொழில்நுட்ப துறையும் இதில் பின்புலமாக இருக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
பண்டிகைகள் காலம் தொடங்கியுள்ளதால், கொரோனா பரவாமல் இருக்க மேலும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று வலியுறுத்திய பிரதமர், பண்டிகை நாள்களில் மக்கள் முகக்கவசம் அணிவதோடு, அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
கொரோனா விவகாரம் குறித்து கடந்த வியாழக்கிழமை மோடி உயரதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அதையடுத்து 48 மணி நேரத்துக்குள் 2ஆவது முறையாக மீண்டும் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.