லடாக் விவகாரத்தில், இந்தியா முன்வைக்கும் நிலைப்பாட்டிற்கு, தலைகீழான நிலைப்பாட்டை சீனா முன்வைப்பதாகவும், இதனால் எல்லை பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியாத சூழல் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
லடாக் முதல் அருணாச்சல் வரையில், தாமகாவே, ஒரு எல்லையை வரையறுத்துக் கொண்டு, அவ்வப்போது, இந்தியாவுக்கு பாத்தியப்பட்ட பகுதிக்குள் அத்துமீறுவதை சீனா வாடிக்கையாக வைத்திருக்கிறது.
சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தையை முனைமழுங்கடிக்கும் வேலைகளை சீனா ஆரம்பித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த வகையில், லடாக் போர்ப்பதற்ற விவகாரத்தில், இந்தியா முன்வைக்கும் நிலைப்பாட்டிற்கு, தலைகீழான நிலைப்பாட்டை சீனா முன்வைப்பதை, மத்திய பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
பேச்சுவார்த்தையின்போது, இந்தியா சார்பில், முதலில், படைகளை விலக்கிக் கொள்வது என்றும், இதையடுத்து, போர்ப்பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்த நிலையையே, இருதரப்பும் தொடர வேண்டும் என, இந்தியா சுட்டிக்காட்டுகிறது.
ஆனால், இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு நேர் எதிராக அதாவது, முதலில், போர்ப்பதற்றத்தை தணிக்க வேண்டும் என்றும், அதன்பிறகு, படைகளை திரும்பப் பெறுவது குறித்து பேசலாம் என சீனா கூறுவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வரவிருக்கும் குளிர்காலத்தை, ஒரு குறியீடாக வைத்துக் கொண்டு, ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும் என்ற தகவலை சீனா கசிய விடுவதாக கூறப்படுகிறது.
சீனாவின் முதலைக்கண்ணீரை புறந்தள்ளியுள்ள இந்திய ராணுவம், எந்த சூழலையும் சமாளிப்பதற்கு, முழு திறனோடு இருப்பதாக, உறுதிபடக் கூறியுள்ளது.