தெலங்கானா மாநிலம் ஐதரபாத்தில் வரலாறு காணாத வகையில் கொட்டி தீர்த்த கனமழையால் நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. திரும்பிய பக்கம் எங்கும் தண்ணீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது.
ஐதராபாத்தின் பல பகுதிகளில் 24 மணி நேரத்துக்கும் அதிகமாக இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்ததால் வனஸ்தலிபுரம், தம்மாய்குடா, அட்டப்பூர் மெயின் ரோடு, முஷீராபாத் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.பாலக்நுமா பகுதியில் மழை வெள்ளத்தில் ஒருவர் இழுத்து செல்லப்பட்டார். சாலையில் இருந்த மின்கம்பத்தை பிடிக்க முயன்றும், அவரால் பிடிக்க முடியவில்லை.
சோமஜிகுடா என்ற இடத்திலுள்ள யசோதா மருத்துவமனைக்குள் தண்ணீர் ஆறு போல் ஓடியது.
போவன்பள்ளி பகுதியில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கார்கள் ஒன்றன் மீது ஒன்று மோதின.
ரமன்த்பூரில் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் அப்பகுதி மக்கள் பரிசலில் செல்ல நேரிட்டது. டோலி சவுக்கி பன்டங்பேட் என்ற இடத்தில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். இயல்பு வாழ்க்கை முடங்கிதால் கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு தெலங்கானா அரசு 2 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. வீடுகளில் இருந்தே பணியாற்றுமாறும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஹைதரபாத் விமான நிலைய செயல்பாடும் பாதிக்கப்பட்டது.
ஐதராபாத்தின் பந்த்லகுடாவில் கனமழை காரணமாக, வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குழந்தை உட்பட 8 பேரும் ஷம்ஷபாத்தின் ககன்பகாத் பகுதியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேரும் உயிரிழந்தனர்.மழை நீர் செல்லும் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததும் இந்த வெள்ள பாதிப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது.
கடந்த 2000 வது ஆண்டில் அதிகபட்சமாக ஐதரபாத் மாநகராட்சியில் 24 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்த நிலையில், தற்போது கடந்த 24 மணி நேரத்தில் 29.8 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுவரை இல்லாத அளவாக புறநகரான காட்கேஸ்வரில் 32 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வியாழக்கிழமை வரை மழைநீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.