கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் மற்றும் விற்பனையாளர்களுடன் நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு உள்ள விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி போலீசாரால் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் விவகாரத்தில் அரசியல் பிரமுகர்களின் குழந்தைகள் தொழில்அதிபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளை விட இந்த ஆண்டு போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதுதெரியவந்துள்ளது.கடந்த 2017-ம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 1,126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,604 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். 2018-ம் ஆண்டு 1,032 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,470 பேர் போலீசார் கைதானார்கள். கடந்த ஆண்டு1,661 வழக்குகளை பதிவு செய்திருந்த போலீசார், போதைப்பொருட்கள் விற்றதாக 2,263 பேரை கைது செய்திருந்தார்கள். நடப்பாண்டில் செப்டம்பர் 15-ந் தேதி வரை போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக 2,589 வழக்குகள் மாநிலம் முழுவதும் பதிவாகி 2,865 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் மட்டும் கடந்த 8 மாதங்களில் போதைப்பொருள் விற்றது, பயன்படுத்தியதாக 2,587 பேர் கைதாகி உள்ளனர். கடந்த 8 மாதங்களில் பெங்களூருவில் மட்டும் ரூ.7 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரிக்க கொரோனா ஊரடங்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஊரடங்கு காரணமாக வேலையை இழந்த பலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுட தொடங்கியுள்ளனர். பெங்களூருவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இது தெரிய வந்தது. எளிதில் பணம் சம்பாதிக்க முடிகிறது என்பதும் இன்னோரு காரணம் என்று கைதானவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரத்துக்கு வாங்கும் வியாபாரிகள் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள சில்லறை வியாபாரிகள் ஒரு கிலோ கஞ்சாவை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விற்று லாபம் அடைந்துள்ளனர் பெங்களூரு நகரில் கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் மூலமாக அதிகளவில் போதைப்பொருட்கள் விற்பனை நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் மூடப்பட்டதால், இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை வாங்கி பயன்படுத்த தொடங்கியதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து கர்நடக மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன்சூட் கூறுகையில், ’கொரோனா ஊரடங்கு காரணமாக போதைப்பொருள் விற்பனை அதிகரித்து விட்டதாக சொல்ல முடியாது. நெருக்கடி காரணமாக மக்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிரிமினலாக சிந்தனை கொண்டவர்களே இது போன்ற தொழிலுக்கு மாறுகின்றனர்.சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முடியாது’ என்றார்.